சிட்னி, டிசம்பர் 07: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மத்திய கடற்கரைப் பகுதியில் பரவிய காட்டுத்தீயினால் 12 இக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பல குடும்பங்கள் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.
நேற்று (06) வெப்பமான மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாகத் தீ வேகமாகப் பரவியது. சுமார் 250 தீயணைப்பு வீரர்கள், 50 வாகனங்கள் மற்றும் 9 விமானங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இன்றும் (07) சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் களத்தில் உள்ளனர். மத்திய கடற்கரைப் பகுதியில் இன்னும் 76 இடங்களில் தீ எரிந்து கொண்டிருக்கிறது, அவற்றில் 20 இக்கும் மேற்பட்டவை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசும் காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாகத் தீ மேலும் வடக்கே பரவும் அபாயம் உள்ளது.
முதல்வர் வேதனை: NSW முதல்வர் கிறிஸ் மின்ஸ் (Chris Minns) கூறுகையில், “கிறிஸ்துமஸ் நெருங்கும் வேளையில் இது மிகவும் அழிவுகரமான செய்தி. 12 இக்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாகியுள்ளன, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். பலர் அவசரகால தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
“நாங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப முடியும், கட்டிடங்களை மீண்டும் கட்டியெழுப்ப முடியும், ஆனால் மனித உயிர்களை மீண்டும் கொண்டுவர முடியாது. நல்ல வேளையாக இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தீயணைப்புத் துறை எச்சரிக்கை: NSW கிராமப்புற தீயணைப்புச் சேவை (RFS) ஆணையர் ட்ரெண்ட் கர்டின் (Trent Curtin) கூறுகையில், நேற்றைய பலத்த காற்றினால் தீப்பிழம்புகள் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று புதிய இடங்களில் தீப்பற்றியதாகத் தெரிவித்தார். இன்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயைக் கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
