கெய்ர்ன்ஸ்: சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜின் அபாரமான பந்துவீச்சால், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென்னாபிரிக்கா முன்னிலை வகிக்கிறது.
கெய்ர்ன்ஸில் இன்று (19) நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, எய்டன் மார்க்ரமின் 82 ஓட்டங்கள் உதவியுடன் 296 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு, அவுஸ்திரேலிய கப்டன் மிட்செல் மார்ஷ் தனியொருவராகப் போராடி 88 ஓட்டங்களைப் பெற்றார்.
இருப்பினும், மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர். குறிப்பாக, கேஷவ் மகராஜின் சுழற்பந்து வீச்சுக்கு அவுஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் முற்றாகச் சரிந்தது. 60/0 என வலுவாக இருந்த அவுஸ்திரேலியா, 89/6 என நிலைகுலைந்தது. 10 ஓவர்களில் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கேஷவ் மகராஜ், ஆட்டநாயகனாகத் தெரிவானார்.