கொழும்பு: இலங்கை வரலாற்றில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முதல் நிறைவேற்று ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க, இன்று (26) மீண்டும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அவரது விளக்கமறியல் இன்றுடன் முடிவடைவதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்காக லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதியைப் பயன்படுத்தினார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும். கியூபாவிலிருந்து திரும்பும் வழியில் அவர் இந்த லண்டன் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி CIDயால் கைது செய்யப்பட்ட அவர், பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, உடல்நலக் குறைவால் தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.