கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வன்பொருள் அறிமுக நிகழ்வு, வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில், ஐபோன் 17 வரிசை, புதிய ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, ‘ஐபோன் ஏர்’ என்ற பெயரில் மிகவும் மெல்லிய ஐபோன் ஒன்றும் வெளியாகலாம் என வதந்திகள் பரவியுள்ளன.
வழக்கமான ஐபோன் 17 மாடல், இம்முறை 6.3 அங்குலத் திரை மற்றும் 120Hz டிஸ்ப்ளே போன்ற பெரிய மேம்பாடுகளைப் பெறும் எனக் கூறப்படுகிறது. ஐபோன் 17 ப்ரோ மாடலில், பின்புற கமெரா வடிவமைப்பு மாற்றப்பட்டு, டைட்டானியத்திற்குப் பதிலாக அலுமினியம் பயன்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக ‘ஐபோன் ஏர்’ உள்ளது. இது, தற்போதுள்ள ‘பிளஸ்’ மாடலுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படலாம். மிகவும் மெல்லிய வடிவமைப்பைக் கொண்டிருப்பதால், இதில் ஒரே ஒரு பின்புற கமெரா மட்டுமே இருக்கும் எனவும், கீழே ஸ்பீக்கர் இல்லாமலும் போகலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மற்றும் சீரிஸ் 11 ஆகியவற்றில், இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் (blood pressure monitoring) புதிய வசதி அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்பாட்ஸ் ப்ரோ 3, புதிய வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒலித்தடுப்பு (noise cancellation) வசதியுடன் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
