கொழும்பு: அரச சேவையைத் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவது தொடர்பான செயலமர்வுத் தொடரின் இரண்டாம் கட்டம், நேற்று (16) அலரி மாளிகையில் நடைபெற்றது.
“அரசின் டிஜிட்டல்மயமாக்கல் பயணத்திற்கு அரச ஊழியர்கள் தயாராக வேண்டும். மக்களின் சேவைகளை மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அத்தியாவசியம்,” என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமணாயக்க இங்கு மீண்டும் வலியுறுத்தினார்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரண்டாம் கட்ட செயலமர்வில், போக்குவரத்து, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் உள்ளிட்ட மேலும் பத்து அமைச்சுக்களின் நிறைவேற்று அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய பிரதான உரையாற்றினார்.