கொழும்பு, டிசம்பர் 01: ‘டிட்வா’ புயல் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காகச் சீனா ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை (USD 100,000) வழங்கியுள்ளது.
இந்த நிதியைச் சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு அவசர நிவாரண உதவியாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தனது எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், புயலால் பாதிக்கப்பட்டு இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வரும் இலங்கை மக்களுடன் சீன மக்களும் ஒருவாறாகத் துணை நிற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் இலங்கை மக்கள் நிச்சயமாக இந்த அனர்த்தத்தில் இருந்து விரைவில் மீள்வார்கள் என நம்பிக்கை கொள்வதாகவும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான சீன வர்த்தக சம்மேளனம் மற்றும் வெளிநாட்டுச் சீனர்கள் சங்கம் ஆகியவை நன்கொடை முயற்சிகளை ஆரம்பித்துள்ளன.
இதன் மூலம், இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக மொத்தமாக 10 மில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
