கொழும்பு, நவம்பர் 30: ‘டிட்வா’ புயலினால் ஏற்பட்ட பாரிய சேதங்களை அடுத்து, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் (JICA) ஊடாக இலங்கைக்கு மதிப்பீட்டுக் குழுவொன்றை அனுப்பவுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
JICA ஊழியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட நான்கு பேர் கொண்ட இந்தக் குழு நவம்பர் 30 ஆம் திகதி ஜப்பானில் இருந்து புறப்படும் என்று ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் தரையில் உள்ள மருத்துவத் தேவைகளைக் கண்காணிப்பார்கள் மற்றும் ஜப்பான் அனர்த்த நிவாரணக் (JDR) குழுவை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஒருங்கிணைப்பார்கள்.
மதிப்பீட்டுப் பணிக்கு மேலதிகமாக, JICA ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கூடாரங்கள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருட்களை வழங்கவும் ஜப்பான் முடிவு செய்துள்ளது.
மனிதாபிமானக் கண்ணோட்டம் மற்றும் இலங்கை மக்களுடனான நெருங்கிய உறவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
