Headlines

டித்வா சூறாவளியின் பின்னரான அத்தியாவசிய சேவைகள் குறித்த ஜனாதிபதியின் பிரகடனம்

டித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள பேரழிவைத் தொடர்ந்து, சமூகத்தின் உயிர் மற்றும் நல்வாழ்வுக்கு அவசியமான சில சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இந்த பிரகடனத்தின்படி, பொதுக் கூட்டுத்தாபனங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்படும் பின்வரும் சேவைகள் அத்தியாவசியப் பொதுச் சேவைகளாகக் கருதப்படும்:

  1. மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளும்.
  2. பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிவாயு உட்பட எரிபொருள் விநியோகம் அல்லது வழங்கல்.
  3. மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளர்களைப் பராமரித்தல், உணவு வழங்குதல் மற்றும் சிகிச்சை அளித்தல் தொடர்பான அனைத்து சேவைகளும்.
  4. பயணிகள் அல்லது பொருட்களின் போக்குவரத்திற்கான பொதுப் போக்குவரத்துச் சேவைகள்.
  5. நெடுஞ்சாலைகள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட வீதி, ரயில் அல்லது விமானம் மூலமான போக்குவரத்துச் சேவைகள் மற்றும் சுற்றுலாச் சேவைகளை எளிதாக்குதல் மற்றும் பராமரித்தல்.
  6. நீர் வழங்கல் மற்றும் வடிகால் தொடர்பான அனைத்து சேவைகளும்.
  7. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் வழங்கல், பாதுகாப்பு மற்றும் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும்.
  8. மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள், சமுதாய வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், தூய்மையான இலங்கை மத்திய குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து கள உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து வகையான சேவைகளும்.
  9. அம்புலன்ஸ் சேவைகள்.
  10. இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கி மற்றும் காப்புறுதி சேவைகள்.
  11. உள்ளூராட்சி மன்றங்களால் மேற்கொள்ளப்படும் நீர், மின்சாரம், வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்புகள், தீயணைப்பு மற்றும் அம்புலன்ஸ் சேவைகள், துப்புரவு மற்றும் குப்பைகளை அகற்றுதல் தொடர்பான அனைத்து சேவைகளும்.
  12. நீர்ப்பாசனம் தொடர்பான அனைத்து சேவைகளும்.
  13. தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகங்கள் தொடர்பான அனைத்து சேவைகளும்.
  14. தாழ்நிலங்களை மீட்டெடுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் தொடர்பான அனைத்து சேவைகளும்.
  15. விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சேவைகள் தொடர்பான அனைத்து சேவைகளும்.

டித்வா சூறாவளியின் பின்னர் சமூகத்தின் உயிர்வாழ்வுக்கும் மீட்சிக்கும் அவசியமான சேவைகளில் ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாரநாயக்கவினால் கையொப்பமிடப்பட்ட இந்த உத்தரவு, 2026 ஜனவரி 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *