Headlines

‘டித்வா’ சூறாவளி எதிரொலி: பதுளையில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவ துணைக்குழு நியமனம் – அமைச்சர் சரோஜா சாவித்ரி அறிவிப்பு.

பதுளை: ‘டித்வா’ சூறாவளியின் கோரத்தாண்டவத்தால் பதுளை மாவட்டத்தில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கான உடனடி நடவடிக்கைகளை ஆராய துணைக்குழு ஒன்றை நியமிக்க மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்ரி போல்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பதுளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (06) நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சூறாவளியின் பாதிப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்கள்:

  • பதுளை மாவட்டத்தில் 28 பிள்ளைகள் தங்கள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர்.
  • குறிப்பாக, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்து அனாதையாகியுள்ளனர்.

இந்தப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, பெற்றோரை இழந்த பிள்ளைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகவே இந்தத் துணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான பராமரிப்புத் திட்டங்களை உடனடியாகத் தயாரிக்குமாறும், அவர்களின் உரிமைகளை மேலும் பாதுகாப்பதை உறுதி செய்யுமாறும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்தத் துணைக்குழுவை நிறுவுவதில் கள அதிகாரிகளின் பங்கு முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், அபாயங்களை முன்கூட்டியே அடையாளம் காண்பதன் மூலம் பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்கு எதிரான உரிமை மீறல்கள், குற்றவியல் சம்பவங்கள் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளைத் தடுக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *