அமெரிக்கா- ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மத்திய கிழக்கில் வெடித்துள்ள இந்த மோதல், கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய முதற்கட்ட தாக்குதல்களுடன் தொடங்கியது. இத்தாக்குதல்களில் ஈரானின் சுப்ரீம் லீடர் கமேனி கொல்லப்பட்டார், இது ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதற்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மீது நேரடியாகத் தாக்குதலைத் தொடுத்தது. மேலும், மத்திய கிழக்கில் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகளின் தளங்களையும் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தியது. இது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.
டிரம்ப் சொன்ன ஒரு வார்த்தை.. எகிறிய பங்குச்சந்தை
இந்த மோதல் எவ்வளவு காலம் தொடரும் என்பதில் தெளிவில்லாத சூழல் நிலவியது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சப்ளை தொடங்கி பல்வேறு விஷயங்களைப் பாதித்தது. கச்சா எண்ணெய் விலையும் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்திற்குச் சென்றது, இதனால் பெட்ரோல், டீசல் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில் தான், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் போர் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். சிபிஎஸ் நியூஸ் உடனான பேட்டியில், ஈரான் மீதான போர் கிட்டத்தட்ட முற்றிலுமாக முடிந்துவிட்டது என்றும், அது சீக்கிரமே முடியும் என்றும் டிரம்ப் கூறினார்.
டிரம்ப் சொன்ன இந்த வார்த்தையைக் கேட்டவுடன் சர்வதேசச் சந்தை தடாலடியாகச் சரிந்தது. திங்கட்கிழமை $119.50 வரை உயர்ந்த கச்சா எண்ணெய், டிரம்ப்பின் கருத்துக்குப் பிறகு $98.96 வரை சரிந்தது. அதேபோல வால் ஸ்ட்ரீட்டில் S&P 500 சரிவிலிருந்து மீண்டு, இறுதியில் லாபத்தில் முடிந்தது.
சரிந்த கச்சா எண்ணெய்.. பங்குச்சந்தை நிலவரம்
நேற்று காலை, சர்வதேச கச்சா எண்ணெய் குறியீடான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $100ஐ தாண்டியது. 2022இல் உக்ரைன்-ரஷ்யா இடையே மோதல் ஏற்பட்டபோது தான் கச்சா எண்ணெய் விலை இவ்வளவு உயர்ந்தது. அதன் பிறகு அது கட்டுக்குள்ளேயே இருந்த சூழலில் மீண்டும் மத்திய கிழக்கு மோதலால் விலை அதிகரித்தது. மேலும், ஆசியா மற்றும் ஐரோப்பாவின் முக்கிய பங்குச் சந்தைகளும் போரால் கடுமையாகச் சரிந்தன.
டிரம்ப் சொன்ன வார்த்தை, உச்சத்தில் இருந்த எண்ணெய் விலைகளைத் தடாலடியாகச் சரித்தது. மேலும், ஆசியா மற்றும் ஐரோப்பாவின் முக்கிய பங்குச் சந்தைகளும் போரால் கடுமையாகச் சரிந்த நிலையில், டிரம்ப்பின் கருத்துக்குப் பிறகு சரிவிலிருந்து மீண்டுள்ளன. இந்தியப் பங்குச்சந்தையும் கூட இன்றைய தினம் பிற்பகலில் லாபத்திலேயே வர்த்தகமானது.
உலக நாடுகள் நிம்மதி
மத்திய கிழக்கில் வெடித்த மோதலால் உலக நாடுகள் பல பிரஷர்களை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இதனால் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதே உலக நாடுகளின் ஒரே கேள்வியாக இருந்தது. டிரம்ப்பின் கருத்து, உலக நாடுகளுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பங்குச்சந்தை உயர்வு ஆகியவை உலகப் பொருளாதாரத்திற்குச் சாதகமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
