Headlines

டி20 உலகக் கிண்ணம்: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா தொடர்ச்சியாக 4-வது வெற்றி! சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி அபாரம்

அகமதாபாத், பிப். 19: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (19) நடைபெற்ற 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலை ஆட்டத்தில், இந்திய அணி நெதர்லாந்து அணியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அபிஷேக் சர்மா ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். எனினும், பின்னர் களமிறங்கிய வீரர்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

குறிப்பாக, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய சிவம் துபே வெறும் 31 பந்துகளில் 66 ஓட்டங்களைக் குவித்தார். அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 34 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நெதர்லாந்து அணி சார்பில் பந்துவீச்சில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுக்களையும், ஆர்யன் தத் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 194 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் திணறியது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. நெதர்லாந்து அணி சார்பில் பாஸ் டி லீட் அதிகபட்சமாக 33 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் சிறப்பாகச் செயற்பட்ட வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுக்களையும், துடுப்பாட்டத்தில் கலக்கிய சிவம் துபே 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியுடன் ‘குரூப் ஏ’ பிரிவில் இந்தியா இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *