அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெற்ற ட்ரம்ப்-புடின் சந்திப்பைத் தொடர்ந்து இடம்பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், மரபுகளை மீறி ரஷ்ய அதிபர் புடின் முதலில் உரையாற்றியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பேச்சுவார்த்தையின் முடிவு குறித்தும் இரு தலைவர்களும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டனர்.
அமெரிக்காவில் நடைபெறும் சந்திப்புகளில் அமெரிக்க அதிபரே முதலில் பேசுவது வழக்கம். ஆனால், இந்த முறை புடின் முதலில் பேசி, தமக்கும் ட்ரம்புக்கும் இடையே ஒரு “புரிந்துணர்வு” ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த முன்னேற்றத்தைக் கெடுக்க வேண்டாம் என ஐரோப்பிய நாடுகளையும் அவர் எச்சரித்தார்.
ஆனால், அவரைத் தொடர்ந்து பேசிய அதிபர் ட்ரம்ப், “ஒரு ஒப்பந்தம் இறுதியாகும் வரை, எந்த முடிவும் எட்டப்படவில்லை” என்று குறிப்பிட்டார். பேச்சுவார்த்தையில் பல விடயங்களில் உடன்பாடு ஏற்பட்டாலும், சிலவற்றில் இறுதி முடிவை எட்ட முடியவில்லை என்றார். இது குறித்து உக்ரைன் மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுக்கு விரைவில் விளக்கமளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
