Headlines

தரம் 6 கல்விச் சீர்திருத்தம் 2027-க்கு ஒத்திவைப்பு! – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி; தரம் 1 மாற்றம் தொடரும்.

கொழும்பு, ஜனவரி 13: சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகம் (English Module) மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, இவ்வாண்டு நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த தரம் 6 க்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ (Dr. Nalinda Jayatissa) தெரிவித்தார்.

ஒழுக்காற்று நடவடிக்கை: குறித்த ஆங்கிலப் பாட அலகில் (Module) ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் கல்வி அமைச்சு நடத்திய விசாரணைகளின் அடிப்படையில், இதற்குப் பொறுப்பான தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

எதிர்காலத் திட்டம்: எதிர்காலத்தில் கல்விச் சீர்திருத்தங்கள் பின்வரும் 5 பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும்:

  1. மனிதவள மேம்பாடு.
  2. உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள்.
  3. மதிப்பீடு மற்றும் பரீட்சை முறைகள் (Assessment).
  4. பாடத்திட்ட மேம்பாடு.
  5. பொது விழிப்புணர்வு மற்றும் மேம்பாடு.

தரம் 1 மாற்றம் தொடரும்: தரம் 6 சீர்திருத்தங்கள் ஒத்திவைக்கப்பட்டாலும், தரம் 1 மாணவர்களுக்கான புதிய சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *