அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்டுள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளின் தொகுப்பின் ஒரு பகுதியாக, டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளைச் சுமத்திய, ஆனால் அதற்கான ஆதாரங்களை வழங்காத பெண் ஒருவரிடம் FBI நடத்திய நேர்காணல்களின் சுருக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்கள் நீதித்துறையின் தரவுத்தளத்தில் (database) காணவில்லை என்ற தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினர் அதிகாரிகள் உண்மையை மூடிமறைப்பதாகக் (cover-up) குற்றம் சாட்டினர். இந்தச் சூழலில் இந்த வெளியீடு அமைந்துள்ளது.
நீதித்துறை அதன் மறுஆய்வு செயல்முறையின் போது, இந்தக் கோப்புகள் “நகல் கோப்புகள் எனத் தவறாகக் குறியிடப்பட்டதால்” (incorrectly coded as duplicative) தவறுதலாக நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
இந்தக் குறிப்புகள் 2019 ஆம் ஆண்டில் அந்தப் பெண்ணுடன் நடத்தப்பட்ட தொடர்ச்சியான நேர்காணல்களை விவரிக்கின்றன. அவர் ட்ரம்ப் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகிய இருவர் மீதும் உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். எப்ஸ்டீன் தொடர்பான எந்தவொரு தவறான செயலிலும் தமக்குத் தொடர்பில்லை என ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
மூன்று குறிப்புகளில் ஒன்றின்படி, பெயரிடப்படாத அந்தப் பெண் FBI முகவர்களிடம் பேசுகையில், 1980களில் தாம் பதின்ம வயதினராக இருந்தபோது எப்ஸ்டீன் மூலம் ட்ரம்புக்கு அறிமுகமானதாகக் கூறினார். தமக்கு 13 முதல் 15 வயது இருக்கும்போது இரு நபர்களும் தம்மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.
நேர்காணல்களுக்குப் பிறகு FBI முகவர்கள் அந்தப் பெண்ணுடன் மேலும் தொடர்பு கொள்ளவில்லை என்று கோப்புகள் தெரிவிக்கின்றன.
அந்தப் பெண் குறிப்பிடும் காலப்பகுதியில் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் ஆகிய இருவரும் ஒருவரைருவர் அறிந்திருந்தனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
புதிதாக வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அவை “முற்றிலும் அடிப்படையற்றவை” மற்றும் “நம்பகமான ஆதாரங்கள் எதுவும் அற்றவை” என்று தெரிவித்தது.
“நாங்கள் எண்ணற்ற முறை கூறியது போல, எப்ஸ்டீன் கோப்புகளின் வெளியீட்டின் மூலம் அதிபர் ட்ரம்ப் முற்றிலும் நிரபராதி என நிரூபிக்கப்பட்டுள்ளார்” என்று பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் கூறினார்.
முந்தைய ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் இருந்த நீதித்துறை இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ட்ரம்ப் மீது வழக்குத் தொடரவில்லை, “ஏனெனில் அதிபர் ட்ரம்ப் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்” என்றும் அவர் மேலும் கூறினார்.
நீதித்துறையால் வெளியிடப்பட்ட கோப்புகளில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் மற்றும் கடிதத் தொடர்புகள் உட்பட ஆயிரக்கணக்கான முறை ட்ரம்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை முன்வந்துள்ள எப்ஸ்டீன் விவகாரத்தில் தப்பிப்பிழைத்தவர்களால் (survivors) ட்ரம்ப் மீது எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை.
2019 ஆம் ஆண்டில் பெயரிடப்படாத பெண்ணுடன் நடத்தப்பட்ட FBI சாட்சி நேர்காணல்களின் சுருக்கங்களுடன், எப்ஸ்டீன் கோப்புகளின் முழுத் தொகுப்பும் அதன் தேசிய அச்சுறுத்தல் செயல்பாட்டு மையத்தின் (Threat Operation Center) தகவல் அளிக்கும் தொலைபேசி எண்ணுக்கு (tip line) அழைத்தவர்களால் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் பட்டியலையும் கொண்டுள்ளது.
ட்ரம்ப், எப்ஸ்டீன் மற்றும் பிற உயர்மட்டப் பிரமுகர்கள் மீது சுமத்தப்பட்ட ஏராளமான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றில் பல சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை போலத் தோன்றுகின்றன; மேலும், பெரும்பாலும் ஆதரிக்கும் ஆதாரங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
ஜனவரி மாதம் எப்ஸ்டீன் கோப்புகள் வெளியிடப்பட்ட பிறகு, நீதித்துறை கூறியது: “சில ஆவணங்களில் 2020 தேர்தலுக்குச் சற்று முன்பு FBI யிடம் சமர்ப்பிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் மீதான உண்மையற்ற மற்றும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் உள்ளன.
“தெளிவாகச் சொல்வதென்றால், இந்தக் கோரிக்கைகள் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை; மேலும் அவற்றில் சிறிதளவாவது நம்பகத்தன்மை இருந்தால், அவை நிச்சயமாக அதிபர் ட்ரம்புக்கு எதிராக ஏற்கனவே ஆயுதமாக்கப்பட்டிருக்கும்.”
ஆரம்பக்கட்ட எப்ஸ்டீன் கோப்பு வெளியீடுகளில் அவை தவறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்ற அமெரிக்க ஊடகங்களின் அறிக்கைகளைத் தொடர்ந்து புதிதாக மூன்று குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
2022 இல் பாலியல் கடத்தலுக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட எப்ஸ்டீனின் கூட்டாளி கிஸ்லைன் மேக்ஸ்வெல் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, 2019 ஆம் ஆண்டில் FBI அந்தப் பெண்ணுடன் நான்கு நேர்காணல்களை நடத்தியதாகக் கோப்புகளில் உள்ள குறியீடுகள் மற்றும் வரிசை எண்கள் உணர்த்துவதாக NPR முதலில் செய்தி வெளியிட்டது.
ஆனால் NPR மற்றும் நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பிற ஊடகங்களின் அறிக்கைகளின்படி, மூன்று நேர்காணல் சுருக்கங்கள் மற்றும் தொடர்புடைய குறிப்புகள் (மொத்தம் 50 க்கும் மேற்பட்ட பக்கங்கள்) நீதித்துறையின் இணையதளத்தில் கிடைக்கவில்லை.
எப்ஸ்டீன் பல ஆண்டுகளாக ட்ரம்புடன் நட்பாக இருந்ததாகத் தெரிகிறது. பின்னர் அவர்கள் பிரிந்தனர் – ட்ரம்பின் கூற்றுப்படி, எப்ஸ்டீன் முதன்முதலில் கைது செய்யப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2000 களின் தொடக்கத்தில் இது நிகழ்ந்தது.
இந்த வாரத் தொடக்கத்தில், எப்ஸ்டீன் கோப்புகளை நீதித்துறை கையாண்ட விதம் குறித்துக் கேள்விகளுக்குப் பதிலளிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டியை அழைக்க (subpoena) நாடாளுமன்றக் குழு வாக்களித்தது.
ஹவுஸ் ஓவர்சைட் (House Oversight) குழுவில் உள்ள குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து அவருக்கு அழைப்பாணை அனுப்ப வாக்களித்தனர்.
கடந்த நவம்பரில், எப்ஸ்டீன் மீதான விசாரணைகளில் இருந்து அனைத்து ஆவணங்களையும் வெளியிடத் துறைக்கு உத்தரவிடும் சட்டத்தை காங்கிரஸ் இயற்றியது. அதன்பிறகு மில்லியன் கணக்கான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
