(திருகோணமலை) – திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் ஏனைய பிக்குகள் உள்ளிட்ட பத்து சந்தேகநபர்களும் இன்று (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 19 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பத்து சந்தேகநபர்களையும் இன்றைய தினம் (28) வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதற்கமையவே அவர்கள் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
திருகோணமலை நகர கரையோரப் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியற்ற கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் புத்தர் சிலை வைக்கப்பட்டதாகக் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாட்டை அடுத்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேகநபர்களுக்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற சட்டமா அதிபர் மற்றும் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்தே, இவர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் முன்னதாக முடிவெடுத்திருந்தது.
இந்த வழக்கில் பெயரிடப்பட்ட பதினொரு சந்தேகநபர்களில் ஒன்பது பேர் கடந்த ஜனவரி 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இதற்கிடையில், விளக்கமறியலில் இருந்த காலத்தில், பலங்கொட கஸ்ஸப தேரர் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்ததும், பின்னர் அது தற்காலிகமாகக் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
