திருகோணமலை கடற்கரை பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை நிறுவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட காஸ்யப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களும் இன்று (11) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த 2025 நவம்பர் 16ஆம் திகதி, கடற்கரை பாதுகாப்பு சட்டங்களை மீறி திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையை நிறுவியமை தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டனர். கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த பெப்ரவரி 09ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களை இன்று (11) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதற்கமைய அவர்கள் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மகா நாயக்க தேரரின் கோரிக்கை
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் மகா நாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தேரர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படுவது குறித்து அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிட்டு தேரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது புத்த சாசனத்திற்கு இழைக்கப்படும் பாரிய அவமதிப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கைது செய்யப்பட்டுள்ள தேரர்கள் உள்ளிட்ட 10 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
