சான்டியாகோ: தென் அமெரிக்காவின் தெற்கு முனைக்கும் அண்டார்டிக்காவுக்கும் இடைப்பட்ட டிரேக் பாசேஜ் கடல் பகுதியில், நேற்று (21) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவாகியுள்ளதுடன், இதனைத் தொடர்ந்து சிலி கடற்படையால் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.
முதலில் இந்த நிலநடுக்கம் 8.0 ரிக்டர் அளவில் பதிவானதாக அறிவிக்கப்பட்டதாலேயே, சிலியின் அண்டார்டிக் பிரதேசத்திற்கு சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இதனை 7.5 எனத் திருத்தியது. இது, பூமிக்கு அடியில் 11 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட ஆழமற்ற நிலநடுக்கம் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரிலிருந்து 700 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில், தென்கிழக்குப் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.