Headlines

தொழிற்கல்வியை மேம்படுத்த அதிகபட்ச கவனம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி

(கொழும்பு) – நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்களுக்குச் சமாந்தரமாக, தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும், தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் அதிகபட்ச கவனம் செலுத்தும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) நடைபெற்ற தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் வருடாந்த டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், 2023 மற்றும் 2024 ஆம் கல்வி ஆண்டுகளுக்குரிய வகையில், நாடளாவிய ரீதியிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக NVQ 5 மற்றும் NVQ 6 தரங்களைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டின் தொழில் சந்தைக்குத் தேவையான தரமான தொழில் வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில் இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் தொடர்ந்து உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய, “இலங்கையின் தொழில்நுட்பக் கல்விக்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நீண்ட வரலாறு உண்டு. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொழில்நுட்பக் கல்லூரி வலையமைப்பு ஆற்றிவரும் பணியை நாம் பாராட்டுகிறோம்,” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “உலகம் மிக வேகமாக மாறிவரும் சூழலில், எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ளத் திறன்களைத் தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தையும் விருப்பத்தையும் ஒருபோதும் கைவிடக்கூடாது. ஒரு தொழிற்பயிற்சி நிறுவனத்திலிருந்து கிடைக்கும் மிக முக்கியமான சொத்து ‘கற்றுக்கொள்ளும் முறையைக்’ (learning how to learn) கற்றுக்கொள்வதாகும்,” என்று வலியுறுத்தினார்.

இன்றைய தினம் டிப்ளோமா சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்கள், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குத் தலைமைத்துவம் வழங்கும் பங்காளர்களாக, நாட்டிற்கும் உலகிற்கும் பயனுள்ள பிரஜைகளாகத் திகழ்வார்கள் எனத் தான் நம்புவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *