கொழும்பு: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை (25) காலை 8 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இலவச சுகாதார சேவையின் சரிவைத் தடுத்தல், வைத்தியசாலைகளுக்கு தரமான மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்குதல், மற்றும் வைத்தியர் இடமாற்றங்களில் காணப்படும் முறைகேடுகளைச் சரிசெய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. முறையற்ற இடமாற்றங்களால், சுமார் 200 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்தப் போராட்டம் சம்பளம் அல்லது கொடுப்பனவுகளுக்காக நடத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ள GMOA, தமக்கு எதிராக அரச ஊடகங்கள் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. தமது சங்கத்தின் பெயரில் போலியான ஆவணங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவது குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.