செய்திக் குறிப்பு:
இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
அதேவேளை, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பனிமூட்டம் மற்றும் எச்சரிக்கை:
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடல் பிராந்தியங்களுக்கான வானிலை:
பொத்துவில் முதல் மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யலாம்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணிக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
எனினும், களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். எனவே, இந்த கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
