ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) காலை நானுஓயா – ரதல்ல வீதியில் பணியாற்றி கொண்டிருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜனாதிபதியின் வருகையைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த தொழிலாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்மையில் தங்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக அவர்கள் ஜனாதிபதிக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், “எமது சம்பளத்தை உயர்த்திய தலைவர் என்பதுடன் மாத்திரமன்றி, தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி இவரே” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஜனாதிபதி விரிவாகக் கேட்டறிந்தார்.
