கொழும்பு: தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் உள்ளிட்ட ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள், நாளை (17) மாலை 4 மணி முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ஆரம்பமாகும் இந்தப் போராட்டம், நள்ளிரவு 12 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குதல், கைரேகை இயந்திரம் மூலம் வருகைப் பதிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் உள்ள 3,354 உப தபால் நிலையங்களின் உப தபால் அதிபர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள் என தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். இதனால், உப தபால் நிலையங்களின் சேவைகள் தடையின்றி நடைபெறும் என்றாலும், தபால் விநியோகத்தில் தாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.