(கொழும்பு) – இந்தியாவில் தற்போது பரவி வரும் நிபா வைரஸ் (Nipah virus) பரவல் குறித்துப் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு இந்த வைரஸால் உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என சுகாதாரப் பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் சுகாதார அதிகாரிகள் பிராந்திய நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், ஒருவேளை சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் எவரேனும் கண்டறியப்பட்டால், அவர்களைப் பரிசோதிப்பதற்கான அனைத்துப் பரிசோதனைக் கருவிகளும் (testing kits) நாட்டில் போதுமான அளவு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய இந்த நிபா வைரஸ், பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாகத் தாய்லாந்து, சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் மலேசியா போன்ற நாடுகள் விமான நிலையக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த வைரஸின் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை காணப்படுகிறது.
எவ்வாறாயினும், மனிதரிடமிருந்து மனிதருக்கு இந்த வைரஸ் பரவுவது மிகவும் அரிதானது எனத் தெளிவுபடுத்திய டொக்டர் விஜேமுனி, “இலங்கையில் கடந்த காலங்களில் நிபா வைரஸ் பரவல் ஏற்பட்ட வரலாறு இல்லை. எனவே இது குறித்து மக்கள் வீண் பயம் கொள்ளத் தேவையில்லை,” என்றார்.
மேலும், பயணம் செய்ய முடியாத அளவுக்குக் கடுமையான நோய் அறிகுறிகளைக் கொண்ட ஒருவரால் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால், வைரஸ் நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “இலங்கையில் இதுவரை எந்தவொரு நிபா வைரஸ் தொற்றாளரும் பதிவாகவில்லை. எனவே மக்கள் இது குறித்துப் பீதியடைய வேண்டாம்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளைப் பரிசோதிப்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், ஒரு நோய் தீவிரமாகப் பரவினால் அல்லது மனிதர்களிடையே எளிதில் பரவும் அபாயம் இருந்தால் மட்டுமே விசேட பரிசோதனைகள் அவசியப்படும் என்றார். பாதிக்கப்பட்ட பயணிகளிடமிருந்து தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால், தற்போது விமான நிலையங்களில் மேலதிகப் பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை என அவர் அத தெரண செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
