சென்னை: தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறந்துகொண்டிருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாணப் பத்திரம் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து வரும் விஜய், நீட் பயிற்சி (NEET Coaching) வழங்கும் ஒரு கல்வி அறக்கட்டளைக்கு ரூ.20 கோடி கடனாகக் கொடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அனிதாவின் மரணமும், விஜய்யின் நிலைப்பாடும்: தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர் மருத்துவ மாணவி அனிதா. நீட் தேர்வால் மருத்துவ சீட் கிடைக்காமல் அவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறியது, மக்கள் மத்தியில் அவர் மீதான நன்மதிப்பை பலமடங்கு உயர்த்தியது. அண்மையில் கூட, “நீட் தேர்வை ரத்து செய்வோம்” என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவானது என விஜய் பொதுமேடைகளில் காரசாரமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
ரூ.20 கோடி கடன் எதற்காக? வெடிக்கும் கேள்விகள்: இப்படி பொதுவெளியில் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விஜய், தனது அதிகாரப்பூர்வ பிரமாணப் பத்திரத்தில் நீட் பயிற்சி வழங்கும் ஒரு பள்ளிக்கு ரூ.20 கோடி கடன் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நீட் தேர்வை ஒருபுறம் எதிர்த்துக்கொண்டே, மறுபுறம் அதற்கான பயிற்சி மையத்திற்கு ஏன் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்ய வேண்டும்? நீட் தேர்வை விஜய் மறைமுகமாக ஆதரிக்கிறாரா? அல்லது சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி நீட் பயிற்சி பெற வேண்டும் என அவர் விரும்புகிறாரா? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். “அப்படியென்றால் அனிதா மரணத்திற்கு விஜய் சிந்திய கண்ணீர் வெறும் அரசியல் நாடகமா?” என நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
சொத்து மதிப்பிலும் முரண்பாடா? நீட் சர்ச்சை ஒருபுறமிருக்க, விஜய்யின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. விஜய் தனது ஒரு திரைப்படத்திற்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குவதாக திரையுலக வட்டாரங்களும், அவரது நிர்வாகிகளும் கூறி வந்தனர். ஆனால், அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.400 கோடி என்று மட்டுமே கணக்குக் காட்டியுள்ளார்.
இதனால், “கெரியரின் உச்சத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததாகச் சொல்வது வெறும் பிம்பம் தானா? அல்லது பிரமாணப் பத்திரத்தில் உண்மையான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளனவா?” என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.
மொத்தத்தில், நேர்மையான அரசியல் மாற்றத்தை முன்னிறுத்தி களமிறங்கியுள்ள விஜய்க்கு, அவரது சொந்த பிரமாணப் பத்திரமே தற்போது மிகப்பெரிய அரசியல் சவாலாக மாறியுள்ளது.
