சென்னை, ஜனவரி 12: சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் ரவிமோகன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. 1960-களின் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கதைச் சுருக்கம்: ஹிந்தித் திணிப்புக்கு எதிராக ‘புறநானூறு’ என்ற அமைப்பின் மூலம் போராடும் செழியன் (சிவகார்த்திகேயன்), ஒரு விபத்திற்குப் பிறகு வன்முறை வேண்டாம் என ஒதுங்குகிறார். ஆனால், வேலைவாய்ப்பிலும் ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதால் ஒரு இளைஞன் தற்கொலை செய்துகொள்ள, மீண்டும் போராட்டக் களத்தில் குதிக்கிறார். ஒரு பக்கம் அரசாங்க அதிகாரியாக வரும் ரவிமோகனின் அடக்குமுறை, இன்னொரு பக்கம் தம்பி அதர்வாவின் வேகம் எனப் போராட்டம் எப்படி முடிகிறது என்பதே படத்தின் கிளைமேக்ஸ்.
நடிப்பு மற்றும் இயக்கம்:
- சிவகார்த்திகேயன்: செழியன் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் வாழ்ந்துள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் போராட்டக் களங்களில் ஒரு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது அவரது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்.
- ரவிமோகன்: மிரட்டலான வில்லனாக வந்து நெஞ்சைப் பதபதைக்க வைக்கிறார்.
- தொழில்நுட்பம்: 1960-களின் பின்னணியை ஆர்ட் ஒர்க் மூலம் தத்ரூபமாகக் கொண்டு வந்துள்ளனர். பொறி பறக்கும் வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலம்.
நிறை, குறை: வசனங்கள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்தாலும், முதல் பாதியில் வரும் சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா காதல் காட்சிகள் படத்தின் வேகத்தைச் சற்றுத் தடை செய்கின்றன. எனினும், ஒரு வரலாற்றுப் போராட்டத்தைத் துணிச்சலாகப் பதிவு செய்த விதத்தில் ‘பராசக்தி’ வெற்றி பெற்றுள்ளது.
