இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000ஐத் தாண்டக்கூடும் என அஞ்சப்படுகிறது. முழு கிராமங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், பெரும் மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமரின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் இக்தியார் கான், “பல கிராமங்கள் வரைபடத்திலிருந்தே மறைந்துவிட்டன. உத்தியோகப்பூர்வ எண்ணிக்கை (சுமார் 300) வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட சடலங்களை மட்டுமே காட்டுகிறது; ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்” என்றார். கூட்டமாக சடலங்கள் புதைக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
எனினும், பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உத்தியோகப்பூர்வ தகவலின்படி, நாடு தழுவிய ரீதியில் ஜூன் மாதம் முதல் இதுவரை 657 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 390 பேர், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன