மும்பை: ஆகஸ்ட் 14ஆம் திகதி ஒரே நாளில் வெளியான ரஜினிகாந்தின் ‘கூலி’ மற்றும் ஹிருத்திக் ரோஷனின் ‘வார் 2’ ஆகிய படங்களுக்கு இடையிலான பாக்ஸ் ஆபிஸ் போட்டியில், ‘கூலி’ திரைப்படம் முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இந்தித் திரையுலகில் ‘கூலி’ படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளதால், அதன் திரையரங்குகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்றைய மூன்றாம் நாள் வசூலில், ‘வார் 2’ திரைப்படம் இந்தியாவில் ₹33 கோடி வசூலித்த நிலையில், ‘கூலி’ ₹38 கோடியை வசூலித்து முந்தியுள்ளது என Sacnilk தளம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்திப் பிராந்தியங்களில் ‘கூலி’ படத்தின் திரையரங்குகள் 3,500ல் இருந்து 4,500 முதல் 6,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
இரு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், ‘வார் 2’ கடுமையான எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால், ‘கூலி’ திரைப்படம் அதன் கதைக்காக விமர்சிக்கப்பட்டாலும், ரஜினிகாந்தின் நடிப்பு மற்றும் ஸ்டைலுக்காகப் பாராட்டப்பட்டு வருவது இந்த வசூல் உயர்வுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.