கொழும்பு: பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், அதன் தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதென, சபாநாயகர் (கலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன இன்று (10) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
தனது தீர்ப்பை விளக்கிய சபாநாயகர், “இலங்கை அரசியலமைப்பின்படி, கூட்டு மற்றும் தனிப்பட்ட அமைச்சுப் பொறுப்பு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கே உண்டு. பிரதி அமைச்சர் ஒருவர் அமைச்சரவை உறுப்பினர் அல்ல என்பதால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர அரசியலமைப்பிலோ, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளிலோ இடமில்லை,” எனக் குறிப்பிட்டார்.
அரசாங்கம், பிரதமர், அமைச்சரவை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு எதிராக மாத்திரமே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியும் என முன்னுதாரணங்கள் உள்ளதாகவும், பிரதி அமைச்சருக்கு எதிராக அதனை அனுமதிப்பது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
