ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜேர்மன் அதிபர் மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடன் இணைய வழியில் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருகிறார்.
அலாஸ்காவில் நடைபெறவுள்ள இந்த ட்ரம்ப்-புடின் சந்திப்பை, ஒரு “செவிமடுக்கும் நிகழ்வு” என வெள்ளை மாளிகை வர்ணித்துள்ளமை, அமைதி ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்புகளைக் குறைத்துள்ளது. இந்த முக்கிய சந்திப்பில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கலந்துகொள்ளாத நிலையில், உக்ரைன் சாதகமற்ற ஒப்பந்தத்திற்குத் தள்ளப்படலாம் என்ற அச்சம் கியவ்வில் எழுந்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பினரும் நிலத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என ட்ரம்ப் கூறியுள்ள யோசனையை உக்ரைன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இதனிடையே, ரஷ்யா ஒரு புதிய இராணுவத் தாக்குதலுக்காகப் படைகளைக் குவித்து வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் அத்தாக்குதல் தொடங்கப்படலாம் எனவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
