உலகளாவிய புத்தாக்கச் சுட்டெண்ணில் (GII) இலங்கையின் தரப்படுத்தலை மேம்படுத்துவது தொடர்பான விசேட ஆலோசனைக் கூட்டமொன்று, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய புத்தாக்க முகவர் நிலையத்தின் வழிகாட்டுதலில் இன்று (14) கொழும்பில் நடைபெற்றது.
நாட்டின் போட்டித்தன்மையை அதிகரித்து, முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும், புத்தாக்கத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பின் பிரதான நோக்கமாகும்.
புத்தாக்கச் சுட்டெண்ணுக்குத் தேவையான 80 குறிகாட்டிகளுக்கான தரவுகளைச் சேகரித்து, உரிய முறையில் சமர்ப்பிப்பதற்கான ஒரு நிலையான தேசிய பொறிமுறையை உருவாக்குவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் மூலம் தரவு இடைவெளிகளைக் குறைப்பதே இதன் இலக்காகும்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமணாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.