புத்த தர்மத்தையும், புத்த சாசனத்தையும், மகா சங்கத்தினரையும் பாதுகாப்பது ஒருபோதும் இனவாதச் செயல் ஆகாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (11) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பௌத்த கலாசாரம் மற்றும் தத்துவத்தைப் பாதுகாப்பது நாட்டின் அனைத்து மதங்களுக்கும் நன்மையளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
“இந்த நாடு பௌத்த அடித்தளத்தின் மீது கட்டப்பட்ட ஒன்று என நான் நம்புகிறேன். பௌத்தத்தை வேராகக் கொண்ட ஒரு தேசத்தால் மட்டுமே அனைத்து மதங்களையும் பாதுகாக்க முடியும். அதனால்தான் நாங்கள் எதற்கும் அஞ்சுவதில்லை.”
மேலும், தான் ஒரு சிங்கள பௌத்தன் என்ற ரீதியில் ஏனைய கலாசாரங்களைப் பாதுகாக்கவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்தார். தனது மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாலேயே தம்மால் மற்றவர்களின் கலாசாரத்தை மதிக்க முடிகிறது என்றும், மதம் மற்றும் கலாசார விழுமியங்களில் நம்பிக்கை இல்லாதவர்களால் மற்றைய சமூகத்தின் மொழி அல்லது மதத்தைப் பாதுகாக்க முடியாது என்றும் நாமல் ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தினார்.
