கூலி’ படத்திற்கு கலவையான விமர்சனம்: ப்ளூ சட்டை மாறனின் கடும் தாக்குதலால் ரசிகர்கள் கோபம்!
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (14) வெளியான ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம், ஒருபுறம் ரசிகர்களின் கொண்டாட்டங்களையும், மறுபுறம் பொதுப் பார்வையாளர்களின் சுமாரான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், படத்தை மிகக் கடுமையாக விமர்சித்திருப்பது, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம்
தனது யூடியூப் பக்கத்தில் மாறன் வெளியிட்ட விமர்சனத்தில், “நண்பனின் கொலைக்குப் பழிவாங்கும் அரதப் பழசான கதை இது. லோகேஷ் கனகராஜுக்கு கொலை, கஞ்சா, கடத்தல் போன்றவற்றைத் தாண்டி கதை எழுதத் தெரியாது” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், “உபேந்திரா போன்ற சிறந்த கலைஞரை வீணடித்துள்ளனர். அமீர்கான் வந்து பீடியின் சுவைகளைப் பற்றிப் பேசுகிறார். இந்தப் படத்தைப் பார்க்கும்போது ‘ஜெயிலர்’ ஒரு நல்ல படம்போலத் தெரிகிறது” என்றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். “காட்டு மொக்கை என்று நினைத்துப் பார்த்தால்கூட இந்தப் படம் பிடிக்காது” என அவர் தனது விமர்சனத்தை முடித்துள்ளார்.
இருவேறுபட்ட ரசிகர் கருத்துக்கள்
மாறனின் விமர்சனம் ஒருபுறமிருக்க, ரஜினி ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். தங்களுக்குப் பிடித்தமான ‘மாஸ்’ காட்சிகளை லோகேஷ் கனகராஜ் சிறப்பாக அமைத்துள்ளதாக அவர்கள் புகழ்கின்றனர். ஆனால், பொதுவான சினிமா ரசிகர்கள் பலரும், படத்தின் திரைக்கதை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், எந்த இடத்திலும் படத்துடன் ஒன்ற முடியவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனத்தால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராகக் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால், ‘கூலி’ படம் குறித்த விவாதங்கள் இணையத்தில் தொடர்ந்து அனல் பறக்கின்றன.