Headlines

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை 2026 மார்ச் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, வழக்கின் மேலதிக விசாரணைக்காக 2026 மார்ச் 14 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு பணித்தார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, அரசியல் நோக்கங்களுக்காக 600 GI குழாய்களைக் கொள்வனவு செய்ததன் மூலம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (SLRC) சொந்தமான சுமார் ஒரு மில்லியன் ரூபாய் நிதியை இழக்கச் செய்ததாகக் குற்றம் சுமத்தி இலஞ்ச ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *