முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்து கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (11) தீர்ப்பளித்துள்ளது.
கம்பஹா மேல் நீதிமன்றத்தின் விசேட நீதாய மேல் நீதிமன்றத்தினால் (Trial-at-Bar) இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதேவேளை, இந்த வழக்கில் தொடர்புடைய ஏனைய நால்வருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 23 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பின்னணி
2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறைகளின் போது, நிட்டம்புவ பகுதியில் வைத்து பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் (பொலிஸ் கான்ஸ்டபிள்) ஆகியோர் உயிரிழந்தனர்.
அன்று மாலை நிட்டம்புவ பகுதியில் தனது வாகனத்தை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர்களில் 27 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க அருகிலுள்ள கட்டிடமொன்றில் மறைந்திருந்த போதே இவர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் 42 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விசாரணைக்குப் பின்னரே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
