Headlines

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ‘எல் மென்சோ’ சுட்டுக்கொலை: நாடு முழுவதும் வெடித்த வன்முறை – வாகனங்கள் எரிப்பு, விமான சேவைகள் ரத்து!

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் மிக முக்கிய போதைப்பொருள் கடத்தல் தலைவனான நெமிசியோ ஒசெகுவேரா (Nemesio Oseguera), பிரபலமாக ‘எல் மென்சோ’ (El Mencho) என்று அழைக்கப்படுபவர், ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனையடுத்து சில மணிநேரங்களில் அவரது ஆதரவாளர்கள் பல மாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைகளை மறித்தும், வாகனங்கள் மற்றும் கடைகளுக்குத் தீ வைத்தும் தாக்குதல் நடத்தியதால் மெக்சிகோ முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

பழிவாங்கும் நடவடிக்கை:

சக்திவாய்ந்த ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ (Jalisco New Generation Cartel – CJNG) அமைப்பின் தலைவரான எல் மென்சோ கொல்லப்பட்ட செய்தி பரவியதும், அவரது ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் வீதிகளில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய CJNG அமைப்பின் உறுப்பினர் ஒருவர், “இந்தத் தீவைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தங்கள் தலைவரின் இறப்புக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக முதலில் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார். மேலும், கார்டெல் அமைப்பின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற உள்நாட்டுக் குழுக்கள் முயற்சிக்கும்போது மேலும் இரத்தக்களரி ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஸ்தம்பித்த போக்குவரத்து – சுற்றுலாப் பயணிகள் தவிப்பு:

அரை டஜனுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் வெடித்த இந்த வன்முறையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

  • புகழ்பெற்ற கடற்கரை நகரமான போர்ட்டோ வல்லார்ட்டாவில் (Puerto Vallarta) புகை மண்டலம் சூழ்ந்ததைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
  • வன்முறை காரணமாக ஏர் கனடா (Air Canada), யுனைடெட் ஏர்லைன்ஸ் (United Airlines) மற்றும் ஏரோமெக்சிகோ (Aeromexico) உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் போர்ட்டோ வல்லார்ட்டாவிற்கான விமானங்களை ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்தன.
  • முக்கிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டன. குறிப்பாக மெக்சிகோ-பியூப்லா நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது.
  • வன்முறை தணியும் வரை லாரி ஓட்டுநர்கள் பாதுகாப்பான பாதைகளில் செல்லுமாறு அல்லது தங்கள் இடங்களுக்கே திரும்புமாறும் சரக்குப் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
  • ஜாலிஸ்கோ (Jalisco) மாநிலத்தில் பொதுப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது.

பாதுகாப்பு நிலவரம்:

சில நகரங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜாலிஸ்கோ மாநிலத்தில் தேசியக் காவல் படையின் (National Guard) தளம் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அகோஸ்காலியென்டெஸ் (Aguascalientes) மாநிலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் ராணுவ டாங்கிகள் ரோந்து செல்வதைக் காண முடிந்தது.

CJNG அமைப்பின் கோட்டையாகக் கருதப்படும் குவாடலஜாராவில் (Guadalajara) வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் வீடுகளிலேயே இருக்குமாறும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

அரசின் பதில்:

மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் (Claudia Sheinbaum) சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில் வன்முறையை ஒப்புக்கொண்டாலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நடவடிக்கைகள் முழுமையான இயல்பு நிலையில் நடப்பதாகத் தெரிவித்து அமைதி காக்க முயன்றார்.

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்படும்போதோ அல்லது கொல்லப்படும்போதோ, பழிவாங்கும் நடவடிக்கையாகவோ அல்லது அதிகாரப் போட்டிக்காகவோ இத்தகைய வன்முறைகள் வெடிப்பது கடந்த இரு தசாப்தங்களாகத் தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *