முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை 2026 ஏப்ரல் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா, பிரதிவாதியான டெய்சி பொரஸ்ட் வழக்கு விசாரணையில் ஆஜராகும் அளவுக்கு மனநலத்துடன் உள்ளாரா என்பதை தீர்மானிப்பதற்கான விசேட மருத்துவ அறிக்கை நியமிக்கப்பட்ட நீதிமன்ற வைத்திய அதிகாரியிடமிருந்து இன்னும் கிடைக்கவில்லை என நீதிமன்றில் தெரிவித்தார்.
அதற்கமைய, அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை வழக்கை ஒத்திவைத்து புதிய திகதியை நிர்ணயிக்குமாறு அவர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
கோரிக்கைகளை பரிசீலித்த நீதிபதி, 2026 ஏப்ரல் 24 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.
2009 மார்ச் 31 முதல் 2013 டிசம்பர் 12 வரையிலான காலப்பகுதியில், சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் 59 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை தனியார் வங்கிகளில் உள்ள மூன்று நிரந்தர வைப்புக் கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம் பிரதிவாதிகள் பணச்சலவை தடுப்புச் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
