சென்னை: ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் மூண்ட மோதல், தற்போது அரசியல் பரிமாணத்தைப் பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் ‘கூலி’ படத்தைக் கடுமையாக விமர்சிப்பதாகக் கூறி, விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சிக்கு எதிராகத் தேர்தல் களத்தில் பணியாற்ற ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கூலி’ திரைப்படம் குறித்து விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள், சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் மற்றும் கிண்டலான பதிவுகள் மூலம் எதிர்மறையாக விமர்சித்து வருவதே இந்த மோதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. திரையரங்குகளுக்கு வெளியிலும் அவர்கள் ‘லியோ’ படத்துடன் ஒப்பிட்டுக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள், வரும் 21ஆம் திகதி மதுரையில் நடைபெறவுள்ள தவெக மாநாட்டில் விஜய்க்கு எதிராகக் கோஷமிடவும், தேர்தல் காலங்களில் விஜய்யின் கட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சினிமா ரசிகர் சண்டைகள் இயல்பானவை என்றாலும், விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், இந்த மோதல் அவரது கட்சியின் இமேஜுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ரஜினியின் வலிமையான ரசிகர் பட்டாளத்தைப் பகைத்துக்கொள்வது, தவெக-வின் எதிர்காலத்திற்குச் சிக்கலாக அமையலாம் எனவும் கூறப்படுகிறது.