சென்னை: இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் படமான ‘படையப்பா’ 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு புதிய படத்தை இயக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “‘படையப்பா’ படத்தின் தயாரிப்பாளர் ரஜினி சார்தான். படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் HD தரத்திற்கு மாற்றுவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. அவர் எப்போது சொல்கிறாரோ, அப்போது படம் வெளியாகும்,” என்றார்.
“ரஜினி, கமல் இருவரையும் வைத்து இயக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அதுகுறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்,” என அவர் குறிப்பிட்டார். தற்காலத்தில் வெளியாகும் படங்களுக்குக் கலவையான விமர்சனங்கள் வருவது இயல்பு என்றும், இறுதியில் படத்தின் வசூலே அதன் வெற்றியைத் தீர்மானிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.