கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியல் குறித்து முன்கூட்டியே தகவல் வெளியிட்ட யூடியூபர் சுதத்த திலக்சிரிக்கு எதிராக, விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு ஒன்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) செய்த முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தியோகப்பூர்வ நடவடிக்கைக்கு முன்னரே, ஒருவர் கைது செய்யப்படுவார் எனக் கூறியது, நீதித்துறையின் செயல்பாட்டில் தலையிடும் செயல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி செய்த முறைப்பாட்டை CID, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் கவனத்திற்குக் கொண்டு சென்றது. இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க விசேட விசாரணைப் பிரிவு ஒன்றை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.