கொழும்பு: விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, “நாட்டின் ஜனநாயக விழுமியங்களின் மீதான ஒரு திட்டமிட்ட தாக்குதல்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசாரணை ஏறக்குறைய முடிவடையும் தறுவாயில் உள்ள ஒரு நிலையில், முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டிருக்கும் விதம், நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் விதியைத் தாண்டியது; இது ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும்” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இவ்வாறான முன்னெடுப்புக்களை அனைத்து அரசியல் தலைவர்களும் எதிர்க்கக் கடமைப்பட்டுள்ளனர் எனவும், தானும் தனது முழுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் சந்திரிகா குமாரதுங்க தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.