ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உத்தியோகபூர்வ அரச மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கைகள் (Intergovernmental agreements) மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்கான அரச மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த விஜயத்தின் போது இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கைக்கு எரிபொருளை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள ஈரானியத் தூதுவர் விடுத்த அறிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்த அறிக்கை பாராட்டத்தக்கது என்றாலும், சொந்தமாக எண்ணெய் தாங்கிக் கப்பல்களை (Tankers) கொண்ட நாடுகள் அத்தகைய வாய்ப்புகளால் பயனடையக்கூடும், ஆனால் இலங்கைக்கு தற்போது அந்தச் சாதகமான நிலை இல்லை எனக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஏற்கனவே பல எரிபொருள் கட்டளைகள் (Orders) வழங்கப்பட்டுள்ளதாகவும், பன்கர் எரிபொருள் மற்றும் இலகு ரக எரிபொருள் எண்ணெய்க்கான டெண்டர்கள் (ஒப்பந்தப்புள்ளிகள்) திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று மற்றொரு டெண்டர் திறக்கப்படவுள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள டெண்டர்களின்படி, ஏப்ரல் மாதத்தில் சில எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் எரிபொருள் விநியோகத்தை நிர்வகிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் விளக்கமளித்தார்.
