2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவர் எந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுப்பார் என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது.
குறிப்பாக, மறைந்த கேப்டன் விஜயகாந்தின் அரசியல் வரலாற்றோடு தொடர்புடையதும், அவர் ஏற்கனவே வெற்றி பெற்றதுமான ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா களமிறங்கக்கூடும் என்ற தகவல் பலமாகப் பரவி வருகிறது. இது தேமுதிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அத்தொகுதியைத் தன் கோட்டையாகக் கருதும் திமுகவினரிடையே கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
ரிஷிவந்தியம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக திமுகவின் வசந்தம் கார்த்திகேயன் உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ள அவர், கடந்த இரண்டு தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களுக்காகக் கடுமையாக உழைத்துள்ள நிலையில், கூட்டணிக் கணக்கின் அடிப்படையில் இந்தத் தொகுதி பிரேமலதாவுக்கு ஒதுக்கப்படலாம் என்ற அச்சம் வசந்தம் கார்த்திகேயன் தரப்பை உலுக்கியுள்ளது.
தொகுதி கைமாறினால் தன்னால் அங்கு மீண்டும் போட்டியிட முடியாது என்பதால் அவர் கடும் வருத்தத்தில் இருப்பதாகவும், தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிஷிவந்தியம் தொகுதி நீண்ட காலமாகவே திமுகவுக்குச் சாதகமான தொகுதியாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், பிரேமலதாவுக்காக இத்தொகுதியை விட்டுக்கொடுத்தால், அது மாவட்டத்தில் திமுகவின் வலுவைச் சிதைத்துவிடும் என திமுக நிர்வாகிகள் அஞ்சுகின்றனர். பிரேமலதாவின் வருகையால் ரிஷிவந்தியத்தில் எழுந்துள்ள இந்தப் பிரச்சனை, திமுக – தேமுதிக கூட்டணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
