[செய்திப்பிரிவு | ஏப்ரல் 05, 2026]
லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் நிறுவனம், உள்நாட்டு எல்.பி. எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் எல்.பி. எரிவாயுவின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் விளைவாக, இறக்குமதிச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, முழுச் சுமையும் நுகர்வோர் மீது சுமத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், குறைந்தபட்ச சாத்தியமான விலை திருத்தத்தையே லிட்ரோ காஸ் அமல்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திற்கான புதிய விலைகள் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளன:
- 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 775 ஆல் அதிகரித்து ரூ. 4,765 ஆக உயர்ந்துள்ளது.
- 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 308 ஆல் அதிகரித்து ரூ. 1,910 ஆக உயர்ந்துள்ளது.
- 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 140 ஆல் அதிகரித்து ரூ. 890 ஆக உயர்ந்துள்ளது.
எவ்வாறாயினும், எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக ஓடர் செய்யப்பட்ட மொத்தம் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுப் பங்குகள் தற்போது மாலத்தீவில் மிதக்கும் சேமிப்பில் (floating storage) வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏப்ரல் மாதம் முழுவதும் நாடு முழுவதும் தடையற்ற விநியோகத்தைப் பேண முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், 20,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் ‘லூய்கி கால்வானி’ (Luigi Galvani) கப்பல் தென்னாப்பிரிக்கா ஊடாக மாலத்தீவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அத்துடன், ‘ஃப்ரெய்சினெட்’ (Freycinet) கப்பல் தென் அமெரிக்காவிலிருந்து மேலும் 20,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் புறப்பட்டுள்ளது.
எனவே, மே மாதத்திற்கும் எல்.பி. எரிவாயுவின் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்குப் போதுமான பங்குகள் கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
