கொழும்பு, நவம்பர் 15: இலங்கைக்குக் கிழக்கே குறைந்த மட்ட வளிமண்டலக் குழப்ப நிலை இன்னும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
தீவின் மற்ற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகாலை வேளையில் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பனி மூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
