கொழும்பு: கொழும்புப் பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக, S&P SL20 குறியீடு இன்று (19) 6,000 புள்ளிகள் என்ற உளவியல் ரீதியான முக்கிய கட்டத்தைக் கடந்து, புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.
வர்த்தக நாள் முடிவில், இக்குறியீடு 58.46 புள்ளிகள் (0.97%) அதிகரித்து 6,055.92 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இதேவேளை, அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்ணும் (ASPI) தனது சாதனை ஓட்டத்தைத் தொடர்ந்து, 20,571.07 புள்ளிகளில் புதிய உச்சத்தில் நிறைவடைந்தது. முதலீட்டாளர்களின் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, இன்றைய மொத்தப் புரள்வு 10.8 பில்லியன் ரூபாவைத் தாண்டியது.
(இலங்கையின் மிகப்பெரிய மற்றும் சிறந்த நிதிநிலையைக் கொண்ட 20 நிறுவனங்களின் பங்குகளைக் கொண்டு S&P SL20 குறியீடு கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.)
