வவுனியா: வடக்கு, கிழக்கில் இன்று (18) நடத்தப்பட்ட கடையடைப்புப் போராட்டம், வவுனியா மாவட்டத்தில் முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது. போராட்ட அழைப்பைப் புறக்கணித்து, பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன், மக்களின் இயல்பு வாழ்விலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
வவுனியா நகர்ப்புறம் மற்றும் செட்டிகுளம், நெடுங்கேணி போன்ற புறநகர்ப் பகுதிகள் எங்கும் பெரும்பாலான கடைகள் வழமைபோல் திறந்திருந்தன. வங்கிகள், பாடசாலைகள் மற்றும் அரச, தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் வழமைபோல இயங்கின. பாடசாலைகளில் மாணவர் வரவு சற்று குறைவாகக் காணப்பட்டாலும், கல்வி நடவடிக்கைகள் தடையின்றி நடைபெற்றன.
இப்போராட்டத்திற்கு வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தினர் மாத்திரம் ஆதரவளித்திருந்த நிலையில், அவர்களது மொத்த வியாபார சந்தை மட்டும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தவிர, மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் ஹர்த்தால் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.