முல்லைத்தீவு மரணம் தொடர்பாக இராணுவ வீரர்கள் மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உண்மைகளைத் திரித்து பரப்பப்படும் தவறான தகவல்களால் மக்கள் வழிதவற வேண்டாம் என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, வடக்கு, கிழக்கில் நாளை (18) நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு மத்தியில் அரசாங்கம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் நளின் ஜயதிஸ்ஸ இது குறித்துப் பேசுகையில், “சட்ட நடவடிக்கை உரிய முறையில் நடைபெறுகிறது. சில அரசியல் சக்திகள் இதனைப் பயன்படுத்தி இனங்களுக்கிடையே அமைதியின்மையை உருவாக்கப் பார்க்கின்றன” எனக் குற்றம் சாட்டினார். அமைதியான முறையில் செயற்படுமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இணைந்து இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.