கொழும்பு: புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பிரதிவாதிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் இன்று (25) அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதன்போது, வழக்கின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பெறுவதற்கே நான்கரை ஆண்டுகள் ஆனதால், விசாரணைக்கு குறுகிய திகதி ஒன்றை வழங்குமாறு பிரதிவாதிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, நவம்பர் 6ஆம் திகதி திகதி குறிக்கப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம், புங்குடுதீவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவி வித்யா, கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில், ‘சுவிஸ் குமார்’ உள்ளிட்ட ஏழு பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017ல் மரண தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.