கொழும்பு: இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கான 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, நாட்டில் ஒரு விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான புதிய, விரிவான திட்டமொன்றைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
கடந்த காலங்களில் நிதி ஒதுக்கப்பட்டாலும், அவை உரிய திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடுகள், உட்கட்டமைப்பு மேம்பாடு, சர்வதேசத் திறமைகளைக் கண்டறிதல் மற்றும் பாடசாலை மட்ட விளையாட்டு அபிவிருத்தி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சுகததாச விளையாட்டரங்கு மற்றும் கிளிநொச்சி, மன்னார் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறும், விளையாட்டுச் சங்கங்களின் பங்களிப்பை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
விளையாட்டில் முதலீடு செய்வது, நாட்டின் ஆரோக்கியம், சமூக நலன் மற்றும் குற்றங்களைக் குறைப்பது உள்ளிட்ட பல நோக்கங்களை நிறைவேற்றும் ஒரு தேசிய முதலீடு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்