ஷாங்காய் மாநாடு: ட்ரம்பின் வர்த்தகப் போருக்கு எதிராக ஒன்றிணையும் இந்தியா, சீனா, ரஷ்யா

அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் ஷாங்காய் மாநாடு: 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் மோடி!

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (SCO) ஒன்றுகூடவுள்ளனர். ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய திகதிகளில் நடைபெறும் இந்தச் சந்திப்பு, அமெரிக்காவுக்கு வலுவான செய்தியை அனுப்பும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் பயணம்

கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாகப் பிரதமர் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது இந்த மாநாட்டின் மிக முக்கிய அம்சமாகும். கல்வான் மோதலுக்குப் பிறகு பதற்றமாக இருந்த இந்திய-சீன உறவுகள், சமீபத்தில் சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து பிரதமரைச் சந்தித்ததைத் தொடர்ந்து, மெல்லச் சீராகி வரும் சூழலில் இந்தப் பயணம் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் 2024இல் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் மோடியும் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக்கொண்டாலும், மோடி சீனாவிற்கு நேரடியாகப் பயணம் செய்வது 7 ஆண்டுகளுக்குப் பிறகே ஆகும்.

இந்த உறவின் முக்கியத்துவத்தைக் காட்டும் விதமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங், மோடியையும் புடினையும் தனிப்பட்ட முறையில் வரவேற்பார் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


அமெரிக்காவுக்கு எதிரான வலுவான செய்தி

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி முழுமையாக அமலுக்கு வரவுள்ள சூழலில் இந்த மாநாடு கூடுகிறது. இது குறித்துப் பேசிய ‘தி சீனா-குளோபல் சவுத் ப்ராஜெக்ட்’ ஆய்வு நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் எரிக் ஓலாண்டர், “அமெரிக்காவுக்கு ஒரு போட்டி சக்தி உள்ளது என்பதைக் காட்டவே ஜி ஜின்பிங் விரும்புகிறார். பிரிக்ஸ் போன்ற அமைப்புகளின் வளர்ச்சி ட்ரம்புக்குக் கவலையைக் கொடுத்துள்ளது. இந்த உச்சிமாநாடு, அமெரிக்காவின் நடவடிக்கைகள் விரும்பிய பலனைத் தரவில்லை என்பதைக் காட்டுவதுடன், ட்ரம்புக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பும்” எனக் குறிப்பிட்டார்.

2001ஆம் ஆண்டு முதல் நடைபெறும் ஷாங்காய் மாநாடுகளில், இதுவே மிகப்பெரிய மாநாடாக அமையவுள்ளது. இதில் மத்திய ஆசியா, மத்தியக் கிழக்கு உள்ளிட்ட பல பிராந்தியத் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா இடையே முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும் என ரஷ்யத் தூதரக அதிகாரிகள் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், இந்த மாநாடு அதற்கான களத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *